நிலவை அறிதல்

சூரிய முதலாளி ‘கொதி’ ஆறி
இலாபமீட்டிப்
போகுமுன்பு சாமிக்குப் போட்ட வெள்ளிக் காசோ நீ?
என்றும் உழைப்பவர் போல்
இளைத்து மின்னும் விண்மீன்கள்
சிந்தும் வியர்வையென்னும் சீதனத்தின் ஓர் சொட்டோ?
இரவைச் சலவை செய்யும் ‘பவர்சோப்போ’ இல்லாட்டில்
மேகமெனும் கூட்டினிலே முகிலிட்ட முட்டையிதோ?
தென்றல் இளைப்பாறிச்
செல்லும் ‘அம்ச தூளிகையோ’?
பாதையினைச் சரிபார்க்க அலைக்குதவும் கலங்கரையோ?
பட்சிகளுக்கு எட்டாத பழமோ?
ஏய்…என்னினிய வெண்ணிலவே.. நீயார்?
உனது விலாசமென்ன!
உன்னுறவு யார் யார்? உன்வீட்டு வாசலெங்கே!
இயற்கையவள் வெட்டி எறிந்த நகம் நீயா?
பெண்ணுக்கும் உனக்கும் ‘பிறப்புரிமைத் தொடர்புண்டா?
உன் முதுகிலும் நவீன ஓவியங்கள்
ஆர் வரைந்தார்?
‘சந்திரவட்டம்’ என்னும் தலைக்கிரீடம் ஆர்தந்தார்?
ஓளவைப்பாட்டியை நீ அடைத்துவைத்தாய் என்பது தான்
இவ்வூரின் நம்பிக்கை இது மெய்யா?
பூமியின் பின்
சுற்றித் தினம் திரிந்தும் சோராமல் காதலிக்க
எங்குகற்றாய்?
உனக்கு கலியாணம் எப்போது?
இவை எனக்குத் தெரியாது!
என்றாலும்….. சில அறிவேன்
விஞ்ஞானக் கால்பட்டும் மங்காத தங்கம் நீ!
‘வரவு செலவு’ வரும்
வாழ்க்கைக்கு உவமை நீ!
‘வழித்தேங்காய் எடுத்துத் தெருப்பிள்ளையார்க் கடிக்க’
பழக்கினாய் நீ….
கதிரில் கடன்வாங்கி எமக்கொழிரும் மழைபொழிந்து
காதல் மயங்க மது பருக்கும்
கொடையாளி!
கோடிக்கவிதைகட்கு உருத்தாளி!
நிலங்குடிக்கப் பாலூட்டும்
‘காமதேனுப்’ பசு நிகர்த்த
விண்ணின் ‘நியோன் பல்ப்’ நீ! விடியாத இரவொருநாள்
ஒளிருமென மாதத்துக் கொருநாள் என் வீடுவந்து
கழுவும் விருந்தாளி!
ஆம், நிலவே பெரியாள் நீ!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply