மைந்தனுக்கு ஓர் மடல்

நேற்றுத்தான் நீயனுப்பி வைத்த ‘செக்கும்’
நீல மடலும் கைக்கு எட்டிற்றையா!
கேற்றடியில் செய்த தவம் பலித்து… காத்துக்
கிடந்தவிழி பூத்ததடா! கடிதக்காரன்
நேற்றோடு நேசமானான், நொட்டை சொல்லி
நின்றவர்கள் வாயடைத்தார்? உந்தன் அன்பு
ஊற்றடைக்க வில்லை… என்றேன் எனினும் வெந்தேன்
உன் ஊரின் குளுமையையுன் சிரிப்பில் கண்டேன்.

இத்தாலிப் பெட்டையினை ‘எழுதிப்போட்டு’
என்கோபம் ஆற்றவாநீ ‘எனையும் வாவா
இத்தாலிக்’ கென எழுதி உள்ளாய்? என்னை
இத்தாலி மண்ணை விற்றாவர நீ சொன்னாய்?
செத்தாலும்… ‘என்குஞ்சி’ எனக்கு என்று
சீதனமாய்த் தந்தவீட்டை உந்தன் கொப்பர்
வித்தை செய்து விளைத்தமேட்டை நீ மண் தின்று
விரிந்த கூட்டை விட்டுவிட்டு வராதிக் கட்டை!

பல் செட்டுப் புனையவைப்பாய் கிறீம், மை பூசி
கருங்கியதோல் பளபளக்கச் செய்வாய்! சல்லிக்
கல்ரோட்டைச் செருப்பின்றிக் கடந்த காலில்
‘கன்வஸ் சூ’ மாட்டிடுவாய் கம்பளிக்குள்
தள்ளிடுவாய் ‘ஹோலிலு’ள்ள ‘சோபா’ஒன்றே
தஞ்சமெனக்கிடக்கவைப்பாய்! ‘சுவற்றர்’ பின்ன
மௌள எனைப் பழக்கிடுவாய்! நின்சேய் தூங்க
‘றாப்’ பாடச் சொல்லிடுவாய்! வரவே மாட்டேன்.

விதானையாரின் தாய்க்கிழவி அடித்த கூத்தை
வீடியோவில் பாத்தவள் நான் வெளிநாடென்றால்
முதுமைகளும் நாகரிக மதுவில் மூழ்கின
முருகா! உன்நிலையென்னே? வேண்டாம் இங்கே
சதை சிதறும் நிலை வரினும் சதையைக் காட்டித்
தன்மானம் விற்கும் நிலை வரலை! வாழ்வின்
நதிமூலம் கண்டுயிர்த்த சாரவாழ்க்கை
நம்மதடா! இதைவிடவுஞ் சொர்க்கம் இல்லை!

தமிழ் மணக்கும் பூமண்ணும், வைகறையில்
தட்டியெனை எழுப்பும் மணி நாதக் காற்றும்
அமுதான ஊர்க் கிணற்றின் நீரும், கூட்ட
அலுக்காத அடிவளவும், குரக்கன் புட்டும்,
குமரா… டேய் எனைச் சூழ்ந்தால் வாழ்வேன்! உன் ஊர்க்
கொடுங்குளிரில் எனை நட்டால் வரழ்வேன்! உன்னைச்
சுமந்தகடன் தீர்த்துவிட்டாய் இனிமேல் தான் நான்
எனைச்சுமந்த மண்ணின்கடன் தீர்க்கப் போறேன்.

நல்லூரின் பிரசாதம், நயினாதீவில்
நானுனக்காய் நேர்ந்தெடுத்த அரைஞாண, கைநூல்
எல்லாமும் அனுப்ப ஆசை நீ ஏற்பாயோ?
இவை ‘பஷனா’ என்பாயோ? ஆறிக ஒன்று… உன்
‘இல்லறத்தில் நிரந்தரங்கள் இல்லை’ எங்கள்
இதம்தாண்டா எமைமதிக்கும் எல்லை உந்தன்
பிள்ளைக்கிவ் வூர் கொடுமை! அதனால் எந்தன்
‘பேத்தி படம் அனுப்பெனக்கிம் மண்ணே பாடை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply