இன்றும் நாளையும்

நேற்றிருந்த நிலைஎண்ணி எண்ணி ஏங்கி
‘நெக்குருகித் தவிப்பதுவும்.. சொற்பச் சொர்க்கம்
காற்றினிலே கற்பூரம் கரைதல் போலே
கரையக் கண்டழுவதுவும்… நாளை என்ன
ஏற்படுமென்றறியாமல் இடறிக்குண்டின்
இடிவிழுநாம் கருகுவதும்… ரத்தக் கண்ணீர்
ஆற்றினில் யாம் அலைவதுவும், அகதி வாழ்வும்
அலையழித்த மணல்வீடாய்.. ஒருநாள் சாயும்

நாளையொரு வாழ்வெமக்கு மலரும் அன்று
நரபலிகள் அற்று இனம் ‘பெருகிக் காய்க்கும்
பாலுமின்றி ‘சரசயனம்’ மீது செய்த
பயத்தவங்கள் விழும்: ‘பாலகாண்டம்’ தோன்றும்
‘ஏழு அரைச்சனி’ போன்ற கொடுமை நீங்கும்,
எம் மண்ணின் வடு, காயம் மறையும், அஞ்சித்
தாழ்ந்திருந்த கலைதழைக்கும், தமிழும் ஆர்க்கும்
வசந்தத்தின் நிழலெமையும் தடவிப் பார்க்கும்.

விருப்பம்போல் தெருவாய்த் திரிவோம்! கூத்தை
விடியும் வரை ரசித்திருப்போம்! ருசியாய்த் தின்போம்!
திருவிழாக்கள் தினஞ்செய்வோம்! போர்த்துன் பத்தில்
திளைத்தவர் நாம்… ‘பேரின்பம்’ துய்ப்போம்! இங்கே
உருக்குலைந்த பள்ளிகட்டி உண்மை சொல்வோம்!
ஓளி மிகு நம் விழுமியத்தால் உலகை வெல்வோம்!
வருமொருநாள்! நம்புகழை வையம் போற்றும்
‘வாழ்க்கைப்போர்’ ஜெயித்த நமை வரலா றேத்தும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply