மழைப்பணி

என்ன விடாப்பிடியாய் இன்று முழுநாளும்
சிந்திச் சிணுங்கி அழுதிருக்கு
இந்தமழை?
ஓர்பாட்டம் அடித்து ஓய்ந்து…மறுபடியும்
ஆர்ப்பாட்டம் செய்து அலம்புது
என்அயலையெல்லாம்…
தானுமொரு சலவைத் தொழிலாளிபோல்!
எங்கும்
ஈரஞ் சிதம்பி மண்இழகி…நடந்துபோகக்
காத்திருந்து பெய்து தெப்பலாய் நனைத்திடுது!
காற்று ‘கதை’யொன்றை
கையிலேந்தி வருகிறது…
தோற்றேன்
குடையும் எனையே நகைக்கிறது!
அலைகலங்கி நிறம்மாறி
இடியொடு வாக்குவாதம்
புரியக் குளிர்க்கூதல் விசிலடித்துப் பாய்கிறது!
தொடர்ந்தடிக்கும் ‘கைபேசி’…
எங்கோ தெருத்தெருவாய்
நடக்கின்றேன்
ஊர்முழுதும் நடுங்கிக் கிடக்கிறது!
கெண்டைக்கால் வெள்ளம் சிலஇடத்தில்
இடுப்பளவு
தென்பட்ட வெள்ளமோ
தேங்கிற்றுக் கொட்டிலுக்குள்!
சில்லிட் டுறைந்த சீவன்களை ‘எண்ணிச்’
சொல்லிவிட்டு
தெப்பமாய் நனைந்த உடைபிழிந்து
தலைதுவட்டிச் சூடாய்த்
தேனீர் சுவைக்கையிலே…
சற்றோய்ந் திருந்து மீண்டும்
சடசடென்று
கொட்டி எனைஅழைத்து மீண்டும்
ஜலக்கிரீடை
செய்விக்க பொங்கிடுது செழித்தமழை!
கைபேசி
மீண்டும் உயிர்த்திடுது
இனி எனக்குத் தூக்கமில்லை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply