சுடர்ப்பிளம்பு

ஏற்றிய ஒருசுடரில் ஆயிரம் ஆயிரமாய்
தோன்றின முகங்கள்!
அவற்றின் கண்ணீர், குருதி
ஊன்வழிந் துருகி நெய்யாய்ச் சொரிந்திருக்க
முளாசி எரியத் தொடங்கியது சுடர்!
எங்கள்
திசைகள் அனைத்திற்கும்,
ஏழுகடல் தாண்டி
உறையும் நிலங்களுக்கும், ஒருபெரு ஒளிப்பிளம்பாய்…
இருள்சூழ்ந்து பூஞ்சிக் கிடக்கின்ற
கண்களின்முன்
ஒளிர்ந்து தமையும்
உலகையும் பார்க்கவைத்த
ஒளிமுதலாய்…
நெஞ்சப் புதைகுளிக்குள் புதைந்து
குருடான உணர்வுகளைத் தூண்டி
உறுத்துணர்ச்சி
பெறவைத்த ஒளிமழையாய்…
அழிந்த யுகமொன்றின்
கரையில், சிதைந்துபோன கனவுகளின் சாம்பலும்
கரைந்துபோன மேட்டில்,
மரித்தோர் எலும்புகளும்
உக்கிச் சிதைந்துதடம் அற்றுறைந்த பெருவெளியில்,
நம்பிக்கை தோற்று
நரகத்துள் ஆட்பட்டு
வெம்பிக் குனிந்துதிர்ந்து சருகான
ஆறாண்டின்
பின்னின்று வந்த பொழுதில்
உயிர்கலங்கி
ஏற்றிய ஒருசுடரில் ஆயிரம் ஆயிரமாய்த்
தோன்றின முகங்கள்!
வான் மண்ணை வியாபித்துத்
தோன்றிய ஒளிப்பிளம்பில் யாரறிவார் அடிமுடிகள்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply