தவம்

எவரிருந்தவர்? எவரறிந்தவர்?
எவர் மிகுந்தவர்? எவர்நலிந்தவர்?
எவர் சிறந்தவர்? எவர் குறைந்தவர்?
எவருணர்ந்தவர்?இவைதெளிந்தவர்?

எவருமிங்குகாண் பெரியரில்லையே
எவருமிங்குதான் சிறியரில்லையே
எவருமிங்குதான் வலியரில்லையே
எவருமிங்குதான் மெலியரில்லையே

வலியர் நாளையே மெலியராகலாம்!
வலிமை கொண்டவை மெலிவு காணலாம்!
தலைசிறந்தவர் கடையராகலாம்
சகதியாடியோர் தலைவராகலாம்

விதியெனும் ஒரு புதிரிருக்குது
விதியை மீறுமா மதி? விடைஎது?
விதியை மாற்றவா சதி நடக்குது?
விளைவு என்னதான் எவருரைப்பது?

இயங்கியற்படி எதுமியங்கிடும்
இசைந்திடாதவை எவைஜெயித்திடும்?
உயிர்உயிர்ப்பதே அதுபெரும் வரம்
உலக வாழ்வுதான் தவம்; உணர்நிதம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply