கந்தனைக் காண வில்லை

மாணிக்க கங்கை ஓரம்
மறைந்தது தமிழின் ஈரம்.
ஆணவம் கன்மம் மாயை
அழித்தவன் பெயரில் கூட
காணலாம் ‘தெய்யோ’ நாதம்.
கடைதெரு எதிற்தான் சைவம்?
காணிக்கை யாக…புத்தன்
விரும்பிய பொருளில்…தானம்!

அருணகிரியார் இரசித்த
அழகனைத் தேடிப் போனேன்.
பெரும்பான்மைக் குள்ளே நானோர்
பேதைபோல் விழித்தேன்! வேலன்
கருவறை…பூசை நேரம்
கனத்தது: சனவெள் ளத்தால்
திருநீறு ‘அருகில்’ வாங்கித்
திரும்பினேன்: குகனைக் காணேன்!

யார்யாரோ திரண்டு வந்து
கதிர்காமம் தனை ஆட்கொண்டார்.
பூசித்தார்: உரிமை பெற்றார்!
நம்மவர் ஒதுங்கி நின்றார்!
வேட்டுவப் பெண்கள் வந்து
விளக்கேற்றித் தினை, தேன் தந்தார்!
வாய்கட்டிப் பூசித் தோர்க்கா
வரம் கதிர்காமர் ஈந்தார்?

‘ஓம்’ மட்டும் ஒளிர்ந்த வாசல்,
உள்ளேயோ பௌத்த வாடை,
ஆம்…மயிலிறகிற் கூட
அந்நியம்: வேல் யார்க்குச் சொந்தம்?
மூவிரு முகங்கள் கொண்ட
முன் திரைச் சீலை மட்டும்
ஈர்த்தது என்னை! என்றெம்
முருகனைக் காண்பேன் இங்கே?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply