பழக்குருவி

ஜம்புக் குலைகளுக்கு இடையில்
கூரையைப் போல்
நின்ற இலைகளுக்கு நடுவில்
சிறு கொப்பில்
முற்றிய ஜம்புப் பழம்போல்…ஒரு சின்னஞ்
சிட்டு இன்றைக்கும்
வந்து அமர்ந்துளது!
இரண்டுமூன்று நாளின்முன் இதேஇடத்தில் நானிருந்து
‘வரவில்லை காற்றென்று’
காத்திருந்த வேளையிலும்…
அதேகொப்பில் அதேஜம்புக் குலைக்கிடையில்
இலைநடுவில்
அதேகுருவி உறைந்து விழியுருட்டி நோக்கிற்று!
அந்த இரண்டுமூன்று இலைகளும்
சிறுகிளையும்
அதனின் சிறுகுடிலாய் ஆயிற்றோ…?
தினந்தோறும்
அதேஇடத்தில் மாலை மயங்க
வந்து அமர்ந்துளது!
அதனுடைய தனிமை,
அதனுடைய அமைதி,
அருகமர்ந்த எனைப்பற்றி அலட்டாமை,
தனுள் ஒடுங்கி
உறங்கல், இவை…அதன்மேல்
பரிவையென்னுள் துண்டிற்று!
எவ்வளவு எளிமையான வாழ்வு?
இதன் இறகாய்
எந்தச் சுமையுமற்ற இலகுபோன்ற பெருவாழ்வு!
பகலையெங்கோ கழித்து
எப்படியோ இவ்விடத்தை
அடையாளங்கண் டடைந்துறங்கும்
நிம்மதிசேர் நல்வாழ்வு!
பார்த்துக்கொண்டிருந்தேன்…
நான் பார்ப்பதைத் தெரிந்தும்
எந்தக் கிலேசமும் அற்றுத் துயின்றதது!
ஜம்புப் பழங்களுக் கிடையினில்
கூரலகு
கொண்ட பழமாய் நிதம்இரவிற் காய்க்கிறது
இந்தக் குருவி…இம்
மரத்தைத் தன் தாயென்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply