நாளைப்போல் வாழ்வு

இந்த விடிகாலை இருள்விலகாப்
பனிப்பொழுதில்
சிந்தை குளிர சிந்தனை வலைவிரித்து
கவிதைக் கனவுகளைக்
கைப்பற்றக் காத்துள்ளேன்!
நடுச்சாமக்…கருவறை இருட்டுள் கருவாகி
அதிகாலை ஜனித்து
அழுகை குறையாமல்
இந்த விடிகாலை மெல்லமெல்லத் தவழும்
சின்னக் குழந்தையாய் நகர்கிறது!
துடிப்புமிகு
இந்தக் குழந்தை சிலபொழுதில் இளைஞனாகும்!
விந்தை ஒளிவெயிலாய்ச்
சிரித்தும் பகலாகும்!
இடையறாத கால ஓட்டத்தில் இது வளர்ந்து
முதிரும் நடுப்பகலில் மணமுடிக்கும்!
படிப்படியாய்
முதுமைகொள்ளும்,
அந்தி முடியப் படுக்கையிலே
விழும் கிழவனாகி இருமிப்பின் னந்திமேற்கில்
சிதையேறி நீறிச் சாம்பலாகும்!
கரியிருளே
மிஞ்ச இந்தநாள்..ஓர்
மனிதவாழ்வாய் முடிந்தேபோம்!
மீண்டும் மறுநாள் புதிய
பிறப்புவாழ்வு
மீண்டும் முதிர்வு மரணம் எனும் ஒழுங்கில்
நாளொன்றின் வாழ்வு நகருமென
உவமான
மின்னல் எனக்கோர் உற்சாகம் ஊட்டியது!
நாளொன்றின் வாழ்வோடுநான் கலந்து
இனி, நித்தம்
வாழவேண்டும் எனும் ஆர்வம்
மனதைக் குதூகலத்தில்
ஏற்ற…எழும் புத்துணர்ச்சி தான்
என்னை இயக்கிடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply