கால நதியின் தீராக்கனவு

கால நதியின் தீரங்களில் எல்லாம்
நினைவுப் புரவிகள்
நின்றுநீர் அருந்தி
பிடர்மயிர் சிலிர்க்க மீண்டும் எழுந்து
நடைபயிலும்!
அவற்றிலே நாங்கள் அமர்ந்து
உசுப்பிவிட
ஆர்முடுகி…. அவற்றின் குழம்பொலியில் காடதிர
பாயும் அவற்றினது காலடிப் புழுதியினால்
சூரியன் மறையத்
தொலைவேகிப் போகின்றோம்!
காலநதி… இன்றும் காணும் இடமெல்லாம்
சோலைபல செய்து
சோற்று வயல் படைத்து
வாழ்வினது மூலமாய்
வனப்போ டலைகிறது!
இந்த நதியது
சிந்து நதிக்கரையில்
நின்று ஜெயித்து
நெருப்பெடுத்துப் பேய்களெழத்
தப்பிச் சிதறி திசையெட்டும் குடிபெருகி
அடையாளம் இழக்காமல்
அன்றிருந்து இன்றுவரை
நிம்மதியாய்த் தூங்க முடியாது
நிராசையொடு
திரிகின்றோம் கிழடுதட்டி நொண்டுங் குதிரைகளில்!
கடைசி நதியும் கடலும்…
எவருமேதான்
தப்பிவிடக் கூடாது எனச்சாய்த்து
தனித்துவங்கள்
அத்தனையும் பறித்து அகதியெனப் பெயரிட்டு
அடிமையெனச் சிறையிட்டு
ஆம்… இனிமேல்…. காலடியில்
வாழ்வதன்றி வேறு வழியில்லை எனஉரைத்து
நிராகரித்தெம் ஆசைகளை
நீர்மூலம் ஆக்கிவிட்டு
எம் சுடலை மேடுகளை எமக்குத் தரமறுத்துச்
சிரிப்பவரின் முன்னே….
சிறிது ஓய்வு எடுத்து
நொண்டிக் குதிரையின்
நோ அகற்றி நோய்விரட்டிச்
சண்டிக் குதிரையாக்கிச் சரித்திரப் புழுதியிலே
கண்டெடுத்த எங்கள் கர்வத்தால்
பசிபோக்கி
வீழ்த்தப் படமுடியா விதைகளென…. யாராலும்
சாய்க்கப் படமுடியா சரிதமென….
யாவையுமே
இழந்தவர்நாம் முரசறைந்தோம்;
இன்றும் புயல்போலக்
கிளம்பும் குதிரைகளின் குளம்பொலியில்
எமைநேற்று
ஜெயித்த இதயங்கள் கூடப்… பயந்ததிர
வேகங்கொண் டோடுகிறோம்;
வீழோமென் றாடுகிறோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply