மலையானை

மலையில் அருவியென மதநீரோ
யானையதன்
கூர்விழியில் இருந்து கொட்டிக்கொண் டிருக்கிறது!
மலைமுகட்டில் இரண்டு சிறகு
முளைத்ததென
யானைகளின் செவிச்சுழகு
காற்றை வலித்துளது!
தந்தமெனும் இரண்டு மலைச்சிக ரங்களாலே
எதையும் பெயர்க்கத் தயாராச்சு
மலையானை!
மலையருகில் சிறுசிறு குன்றுகளாய்
அதன்சேய்கள்.
மலையேறிக் கொழுந்து பறிக்கின்ற பெண்களென
யானையில் அமர்ந்து
அதில் தமது இரைகொத்தித்
தின்றிருக்கும் காகங்கள்!
சங்கிலியால் மலையைக்
கட்டிவைத் ததைப்போன்று யானை திமிறியது!
பாகனும் வந்தான்:
அங்குசத்தை ஆட்டிவிட்டான்:
ஓர்பெரிய மலையானை
ஒன்றுமே பேசாமல்
போகிறது அவன்பின்னே…அங்குசம் சிறிது..அதன்
ஆற்றலோ யானையிலும் பெரிசு!
எங்களிடை
அங்குசமாய் யாரெழுவார்?
அங்குசத்தோ டார்வருவார்?
எங்கள் பிரச்சனைகள் பெரியமலை யானைகளாய்
முன்னே செவியாட்டி,
தந்தங்களால் வெருட்டி,
நின்றுளன:
அங்குசங்கள் எங்களிடம் இல்லை
என்பதை அறிந்தனவோ…?
எமைநெருங்கி வந்துளன!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply