அமைதி அனல்

வெப்ப அனலில் வெடித்து நிலம்சிதைந்து
எப்படியோ புழுதி உதிர்ந்து
எழுந்ததூசு
மண்டலங் கிளம்பி…சூரியனை மறைத்தவனைத்
தும்மவைக்க…
சூரியனின் தும்மலாய்இவ் வெயிலிலும்
வீழ்ந்தன சில துளிகள்:
அவையென்மேல் அமிலத்
தீர்த்தமாய்த் தெளிக்கப் பட
நான் துடிதுடித்தேன்!
நெருப்பும் எரிந்து சாம்பலாகும்… கொடு வெக்கை:
காற்றும் கழுத்தறு பட்டு
அச்சுடலையோரம்
கேட்பார்கள் அற்று இறந்திருக்க,
நிழல்நல்கும்
ஆலரசு வேம்பும் அவிந்து
இலையுதிர்த்து
ஏதும் மழைத்துளிக்கு ஏங்கித் தவித்திருக்க,
சூரியனின் ஓர்துண்டாய்ச்
சுட்டது என் காலடிமண்.
எத்தனை இரத்த ஆறுகள் பாய்ந்தெல்லாம்
வற்றி… ‘அமைதி அனலில்’
நிலம்பிளந்து
மனமும், உடலும் வதங்கி
மிகப்பதைத்து
ஒருகுளுமை நிழலை,
இளைப்பாற இதமடியை,
உடல்மனசைக் குளிரவைக்க உயிர்மழையை,
நேர்ந்துநேர்ந்து
வாடுகிறோம்:
வானம் கறுக்கவில்லை வாடுகிறோம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply