சராசரியின் மறுபக்கம்

சேறும் சகதியும் மிதந்த என்முற்றத்தில்
ஈரஞ் சுவறிக் கிடக்கிறேன்
நடுநடுங்கி!
ஏதோ ஒருநாற்றம் எப்போதும் வீசிற்று!
ஏதேதோ கூச்சல் குழப்பங்கள் கூடிற்று!
ஈயும் நுளம்பும்
பெருகிற்றாம் எண்திசையும்!
பன்றிகளும் வாத்துக்கள் போன்ற பறவைகளும்
கூடி அலைந்தன
குறுக்கு ஒழுங்கையெங்கும்!
சேறழைந்த கால்கள்
சேறணிந்த கைகள்
தூறலும் அடிக்கடி துவைத்துவிடும் சேற்றோடு
குழந்தைகளும் குஞ்சு குருமானும்
குமரிகளும்
சிறுவரும் பெரியோரும்
தேறாத முதியவரும்
பெருகிப் புழுக்களென நெளிவர் எப்பொழுதினிலும்!
இந்த மணமும்
தொடர்ந்து எழும் பெருங்குரலும்
இடைவிடாத ஆரவார இரைச்சலும்
பழகி…இவை
வழமையான….வாழ்வில்
இதற்குள்ளே உண்டுறங்கி,
‘பெரிதாகி’, கலவி செய்து,
பெற்று, வளர்த்தெடுத்து,
இறந்து, வாழ்வினது இன்பதுன்பம் எல்லாமும்
கலந்து, கலங்கிய…
சேறான முற்றத்தில்
சிறிய சிறிய தாமரைமொட்டு டவிழ்வதாய்
சிறுசிறு இன்பங்கள் பூத்திடும்
அதில் பிறக்கும்
நறுமணத்தை நிதம் தேடி ஏங்கி
வாழ்வும் நகர்ந்துபோகும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply