ஏன் சரிந்தாய் எம்மீது?

உன்னடியிற் தானே உயிரை விதைத்தறுத்தோம்!
உன்முகத்திற் காலூன்றித் தானே
உயிர்தழைத்தோம்!
உன்னிருந்து பயனெடுத்தோம்.
உன்தயவில் உணவுகொண்டோம்.
உன்னியல்பு கலந்து உனைப்பிசைந்து சிலைசமைத்தோம்.
உன்மடியில் வளம்பெற்றோம்.
உனையளைந்தே வலிமைபெற்றோம்.
உன்வயிற்றில் தானெம் மூதாதையரைப் புதைத்தோம்.
உன்னடியிற் தானெமது வரலாற்றைக் கண்டெடுத்தோம்.
உன்னோடு ஒட்டி ஒட்டித்தான்
எம்வாழ்வின்
இன்பத்தைத் துன்பத்தை நோய் நொடியைப் பகிர்ந்தோம்.

கண்மூடித் திறப்பதற்குள்
கடல்மூடினாற் போல
உன்னைநீ எங்களது ஊரின்மேல் பொறியவிட்டாய்!
காட்டாறாய்ப் பெருகும் கல்மண்ணை
எம்தலைகள்
மேற்பொழிந்து மூடி எம்வீடு கடை வீதி
யாவையையும்…யாரினதும்…
விருப்பத்தைக் கேளாமல்
நீபுதைத்தாய்:
குடும்பம் குடும்பமாய்ச் சமாதிசெய்தாய்!
நேற்றுவரை இப்படியாய் நீ
வயிற்றில் அடிக்கலையே…
நேற்றுவரை எம்மைநீ நிலைகுலைய வைக்கலையே…
எத்தனை மழை புயலை,
எத்தனை கொடுங்காற்றை,
எத்தனை வெள்ளத்தை, இங்குநேற்றுக் கண்டவள்நீ…
பெத்தவளாய் அரவணைத்துப்
பிரச்சனைகள் ஏதுமற்று
நின்றவள்நீ…இன்றைக்கு ஏனம்மா வஞ்சித்தாய்?
மண்ணினது மைந்தர்நாம் என்பதை
மனங்கொண்டா
மண்ணோடு மண்ணாக எம்மைப் புதையலிட்டாய்?
உன்மடியல் எங்கள்
பரம்பரையின் கதைகளையும்,
உன்னடியில் எங்களது வாழ்வியற் சான்றினையும்,
உன்னிடத்தில் எங்கள் அடையாளப் பொருட்களையும்,
முன்பு பலதடவை தோண்டி
எடுத்ததுபோல்;
எம்உறவைத் தோண்டி இன்று எடுக்கவைத்தாய்!
எத்தனையோ புதுநகர்கள்…
எண்ணற்ற துரோகத்தைச்
செய்தன அத் தாய்மடிக்கு!
நாம்உனக்குச் சிறுதுரோகம்
கூட நினைக்கலை…ஏன் குமுறிவீழ்ந்தாய் எம்மீது?
உன்னைமட்டும் நம்பி
உன்னால் உயர்ந்திருந்தோம்…
இன்றெம் உயிர்குடித்து ஏப்பமிட்டாய் ஏன்கூறு?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply