நிழலாக நில்

என்னிடர்த் தடைகள் நீக்கு!
என்காலை இடறி வீழ்த்தக்
கிண்டுவோர்…அதிலே வீழக்
கீதைசொல்! பிழைகள் செய்தும்
என்னுடன் மோதி வெல்ல
எழும் எமர் தனை அடக்கு!
என்மீது பொய்யாய்ச் சொல்லும்
அவதூறு பொசுங்கத் தீவை!

என்மீது பழிகள் போட்டு
என்னையோர் மடையன் என்று
என்னையே இழிப்போர் தோற்க
இணையடி நிழலை நல்கு!
என்மீது சுமத்தப் பட்ட
களங்கங்கள் துடைத்துத் தூய
கண்ணாடி ஆக்கு! என்னைக்
கண்டுனைக் காண வாழ்த்து!

நேற்றைக்கு வரையும் என்மேல்
வீழ்ந்த பொய்க் கஞ்சல் குப்பைத்
தூற்றல்கள் தூசாய்ப் போக
துணைநின்றோன் நீயே! இன்றும்,
மாற்றங்கள் நிகழும் நாளை
வழியிலும், என்னைக் காக்க
காற்றில் நீ கவச மாகு!
காலத்தை துணைக்குச் சேர்த்து!

தலைக்கென வந்த வேட்டு
தலைப்பாகை யோடு போக,
கலைத்த நாய்த் துயர்…நான் நிற்கக்
கண்டு பின் வாங்கி ஓட,
விலைபேசி வந்த பேய்கள்
வெருண்டேக, வைத்தாய் அன்று!
தொலைவில் வாழ்விறுதி…என்றும்
துணைசெய்…நான் நடப்பேன் வென்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply