நம் நல்லூரான்

அன்பன் எனத்தொடர்ந்தால் அருளி, அணுக்கமான
தொண்டனாக்கி,
நெஞ்சால் நினைந்தணைக்கும் தோழனாக்கி,
என்றும் தனதுயிர் நிழலில்
களைப்பாறப்
பண்ணும் எழில்முருகன்; பண்டைப் பெரும் நல்லை
மண்ணமர்ந்து உலகைக் காக்கும் கலி – வரதன்;
வந்த தடைவென்று…
நின்ற பகைதின்று…
ஞானசக்தி யாய்வாழும் பன்னிருகையன் வேலன்;
தேவர்கள் ஞானியரும்
தேறவொண்ணா விஸ்வரூபன்;
சித்தர்கள் தங்கள் சிந்தைக்குள் அடைவைத்துப்
பித்து மொழியாலே பூசிக்க…மகிழுபவன்;
நெஞ்சில் கலக்க எரிமலை குமுறுகையில்…
கண்ணூடு கவலைக் காங்கை முளாசுகையில்…
“அஞ்சற்க” என்று…அபய
மழைபொழிந்து தேற்றுபவன்;
பேதங்கள் பாராப் பெரியோன்;
பணிந்து நம்பும்
யாவரையும் காப்போன்;
நிம்மதி வரந்தருவோன்;
என்ன பெருஞ்செல்வம் ஈந்தாலும்… ஏற்காது
அன்பென்னுஞ் செல்லாக் காசுக்கும் விலைபோவோன்;
ஆடம் பரமும் அழகும் செழித்திருந்தும்
தேடி எளிமைநெஞ்சைத் தேராக்கி ஊர்திரிவோன்;
மின்னும் நகைபுனைந்து
மன்னவனாய்ப் பவனிவந்தும்
துன்பச்சே றுழல்வோரைத் தூக்கி நிறுத்திடுவோன்;
என்னைக் கருவியாக்கித்
தான் சுருதியாகி நிற்போன்;
என்கவிக்குள் நானழைத்தால்
நர்த்திக்கும் முருகையன்;
என்னால் கவிதையாக்கித் தான்பொருளாய் வாழுபவன்;
அறியாமை ஆசையால் ஏங்கி
நான் பலகேட்க
எனக்கேற்ப உறவு, பொருள், பதவி, புகழ் தனைத்தந்து
என்றுமென் காலிடறி வீழாமல்
தூயதிசை
செல்லவழி காட்டுபவன்;
நம்விதித் தலையெழுத்தை
நல்வேலால் நாழும் திருத்தி எழுதுபவன்;
இன்பமும் துன்பமும் வெற்றிகளும் தோல்விகளும்
நன்மையும் தீமையும் ஞானமும் பேதமையும்
தானாகி நிற்போன்;
சகலதற்கும் காரணன்; ‘நம்…
நல்லூரான்’! எனக்கு எல்லாமும் ஆன…அவன்
சொல்கின்றான் “பொல்லாப்பு இல்லையென”
நடந்திடுவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply