நியாயப் படுத்தல்கள்

நியாயப் படுத்தல்கள் முடிவுகளாய் மாறாது.
நியாயப் படுத்தல்கள்
இறுதித் தீர்வாகாது.
நானென் ‘சரி’ உரைக்க நியாயப் படுத்துகிறேன்.
நானென் ‘பிழை’மறைக்க நியாயப் படுத்துகிறேன்.
நீயுன் ‘சரியை’ உரைக்கநியாயப் படுத்துகிறாய்.
நீயுன் ‘பிழையை’ மறைக்கநியாயப் படுத்துகிறாய்.
அவன்தன் ‘சரியை’
உரைக்கநியாயப் படுத்துகிறான்.
அவன்தன் ‘பிழையை’
மறைக்கநியாயப் படுத்துகிறான்.
எனது சரி பிழையை,
உனது அவனின் சரிபிழையை,
உலகம் “சரி பிழை” யென் றேற்றிடுமோ…? இதையறியோம்!
“எது உண்மைச் சரி-பிழை” என்றெவர்தான் அறிந்திடுவோம்?
எதைக் காலம் ‘சரி-பிழை’யாய் ஏற்கும்
எவரறிவோம்?
நியாயப் படுத்திவிட்டால் அதுசரியோ…?
நாண்டு…நின்று
நியாயப் படுத்திவிட்டால் அதுபிழையோ…?
இதைஉலகம்
ஏற்றிடுமோ? ஏற்காதோ?
ஏதும் கவலையின்றி
நியாயப் படுத்துகிறோம் எமது நிலைப் பாடுகளை!
அன்றொருநாள் நியாயப் படுத்தியதை
எண்ணுகையில்
இந்நாளில் வெட்கமும் சங்கடமும் எழுவதுண்மை!
இன்றெமது நியாயப் படுத்தல்கள்
ஒருவேளை
இன்னொருநாள் சங்கடத்தை
ஏற்படுத்த வாய்ப்புமுண்டே.
இன்றெம்மை உயர்த்த,
இன்றெம்மைத் தக்கவைக்க,
இன்றெம்மைக் காக்க, இன்றெம் தடிப்புகளை
நானென்ற ஆணவத்தை
விட்டுக் கொடாதிருக்க,
எம்தவறைப் பூசி மெழுக,
தலைகவிழ்ந்து
யார்முன்னும் எம்சுயம் தோற்பதைத் தவிர்த்துவிட,
எமது அறியாமையை
எவருமறியாமற் தடுக்க,
நியாயப் படுத்துகிறோம்…!
‘உலகப் பொது நேர்மை–
நியாயத்தைப்’ பாரோம்…,
எம்நியாயப் படுத்தல்கள்
தோற்றுவிடக் கூடாது என்று நிதம் நேருகிறோம்.
எத்தனையோ பேரின் நியாயப் படுத்தல்கள்
செத்தழிந்த வரலாற்றைத் தெரிந்தும்
அதை நினையோம்.
காலமென்ற ஒன்று சொல்லும் நியாயந்தான்
மாறாது என்றென்றும்!
எம் நியாயப் படுத்தலெல்லாம்
காலத்தின்முன் காலா வதியாகும்…எவருணர்ந்தோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply