கடவுளா காசு?

காசே கடவுளென்று நேற்றக் கணம்மட்டும்
போற்றிப் புகழ்ந்தீர்!
அது வெறும் கடதாசிக்
குப்பையென
அதனின் ‘பெறுமதி உயிர்ப்புதனை’
சப்பியே துப்ப…சடலமாச்சு அது… துடித்தீர்!
சடலங்கள் பெருகப் பெருக
சமூகத்தில்
முடநாற்றம் கூடிற்று…
முழுசிய பலர்: காத்த
‘கறுப்புச் சடலங்கள்’ பிறர்கண்ணில் படுமென்று
புரிந்துதம் வீடுகளில்
தகனக் கிரிகைசெய்தார்!
சாமா னியர்கள் “காசாலே இப்படியும்
ஆகுமா இடர்” என்று
அலைந்து திகைத்துள்ளார்!
“எதுவும் இருக்கும் இடத்தில் இருக்குமட்டும்
பெருமை உடைத்தென்னும்”
பேச்சையின்று
வழிமொழிந்தேன்!
“காசு கடவுளல்ல…
அதுவும் நமைப்போல
நாற முடியு” மென்ற…நாடகம் அரங்கேறி
ஊரைப் புரட்டிற்று!
ஊழல்சாம் ராஜ்யங்கள்
‘ஊரடங்காய்’ ஒடுங்கின!
உண்மையான மானுடம்தான்…,
மானுடத்தின் குன்றா மகத்தான உழைப்புத்தான்…,
நாறாது!
அதுதான் நலியாது!
உலகிலதே
ஆகப் பெறுமதி கூடியது…
எனும்தெளிவு
யார்க்குப் பிறந்துளதோ….?
யதார்த்தம் உரைத்திடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply