கவிதைக் கவலை

நாளை என்ன கவிதைகளை
நான் எழுதப்போகிறேன்?
ஏதும் அறியேன்.
நாளையா? மறுநாளா?
தேடி வரும் கனவாய் சேரும்..கவி? அறியேன்!
எண்ணத்தில் அலையடிக்கும்
எந்தெந்தச் சொற்துளிகள்
நாளை எழுந்து வரும்?
அந்தந்த சொற்கள் எப்படிஓர் வரிசைபெறும்?
அவற்றைஎக் கற்பனைநூல் கோர்த்து விடும்?
எந்தெந்த
உவமான உத்திகள் உதித்து மெருகேற்றும்?
அக்கவிதை யாரை அணுகும்?
கவர்ந்து விடும்?
அக்கவிதை யாரெவர்க்குக்
கலங்கரையாய் ஒளி கொடுக்கும்?
அக்கவியை யாரெவர்கள்
வழமைபோல் நிராகரிப்பர்?
நேற்றைய கவிதையைத் தாண்டி
அது…தூரக்
காற்றில் நிலைத்திடுமா?
பின்தங்கி ஓய்ந்திடுமா?
வாடாத மல்லிகையாய் வரலாற்றில் வாழ்ந்திடுமா?
சூடாத மல்லிகையாய்ப்
பொருள் இழந்து தோற்றிடுமா?
அக்கவியின்  பேசு பொருள் என்ன?
அதன் ஆன்மா
அக்கவியின் ஜீவனென்ன?
அதன் ருசி, சுவை என்ன?
இன்று எழுதியதே எங்கு நேற் றிருந்ததென
ஒன்றும் அறியேன்:
அதை வியக்க.. சந்தேகம்
ஒன்று…இன்றைக் கவிதான்
இறுதிக் கவிதையதா?
என்று எனைக் கேட்கும்
என்ன பதில் சொல்வேன்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply