சாபம்

விபரம் தெரியாதோர் விபரீதம் தேறாதோர்
இதுநல்ல முடிவென்று,
இதுஅருமை மாற்றமென்று,
இதைவிட ஒன்று இனிக்கிடைப்ப தரிதென்று,
அனுபவங்கள் அற்றுக் களிக்கின்றார்
ஆடிஆடி!
எனது கவலை இவர்களைப் பற்றியல்ல!
விபரம் தெரிந்தோர்,
விபரீதம் அறிந்தோர்,
இதுநல்ல முடிவல்ல
இதுஅருமை மாற்றமல்ல
எனத்தேர்ந்தோர்…
இதுபோன்ற அனுபவம் பலகண்டோர்…
மனங்கலங்கி
இதனால் “நாளையென்ன ஆகு”மென
ஏங்குவோர்…
ஏங்கினாலும் ஏதுமே பேசாமல்
மோனிகளாய் ஊமைகளாய்
மூலைகளில் ஒதுங்குகிறார்!
விபரம் தெரியாரின் ஆட்டத்தை விட…இந்த
விபரம் தெரிந்தோரின் மௌனம்
ஊரின் சாபமாச்சாம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply