உழவுப் போர்.

நீரற்று வாடும் நிஜப்பயிர்க ளாய்… நீவிர்
தார்வீதி வெயிலில்
தளிர்போல் வதங்குகிறீர்!
வரண்டு இலையுதிர்த்த மரங்களென
உடைகளைந்தீர்!
வெறுங் கோவணம் பூண்டீர்
வரங்கேட்டுத் தவஞ்செய்தீர்!
எலிகளும் பாம்புகளும் எத்தனையோ படிமேலாய்…
இறந்தபின் நிம்மதியாய் இருக்க
இறந்தஅவை
கௌவிக்…
கிடைக்காத நிம்மதி நியாயத்தை
எவ்வாறேனும் பெறவே பசிப்போர் புரிகின்றீர்!
பொறுக்க முடியாமல்
பொத்திவைத்த மானத்தைத்
துறந்துங்கள்…
வாழ்வின் நிர்வாண நிலைசொல்ல
நிர்வாண மாக நின்றீராம் டில்லியினில்!
மண்டையோட்டு மாலைபோட்டீர்,
மண்சோறு தான் தின்றீர்,
பாதிமீசை மழித்தீர், பாதிமொட்டை அடித்தீர்,
தாலி  அறுத்தீர் 
கைவளையலை உடைத்தீர்,
சாட்டையால் உங்களைநீர் சரமாரியாய் அடித்தீர்
குத்துக் கரணமிட்டடீர்,
குமரிகள்போல் சேலையினைக்
கட்டியும் போராடி கவனத்தை ஈர்க்க நிற்பீர்!
ஊருலகம் கண்டு உமக்கிரங்க
ஏதேதோ
வேலைகளில் மூழ்கிற்று ஆழும் உயர்வர்க்கம்…
ஏனென்று கேட்கவில்லை இளகவில்லை
ஆட்சிபீடம.;…
ஊருக்கே சோறூட்டும் உழவனின்–
இழுக்கின்ற
சேடத்தைச் சீராக்கும் சிரத்தையற்று,
அவர்களது
தேவைகளைக் கேட்கும் திராணியற்று,
அம்மணத்துச்
சாமிகளை, நடிகைகளைச்
சமஸ்த்தானத்தில் ஏற்றி
ஆலாத்தி எடுத்தபடி ஆணவமாய்…
அதிகாரம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply