நாயகன்

 

வெளித்தோற்றம் ‘நாயகன்.’
உள்ளேயோ நீ ‘வில்லன்.’
ஆழகான நண்பன். அகத்தில் முதற்பகைவன்.
பேரில் பெரியோன்.
பெருமையில் மிகஇழிந்தோன்.
ஊரில் உயர்ந்தோன். உளத்தில் மிகத்தாழ்ந்தோன்.
“உன்பிழைக்கு ஆதரவாய்
உரைக்கவில்லை அன்று ஏதும்,
உன்தவறைத் தண்டித்தார்
உதவவில்லை அன்று நானும்”
என்பதற்காய்
உள்ளே கறுவிக், குரோதவிசம்
கொண்டபடி,
வெளியே குளிரச் சிரித்தபடி,
என்னை இழிவுசெய்ய எண்ணி,
சபையேறிச்,
சொன்னாய் பழிப்புரைகள்!
சொறிந்தாய் என்செயல், இயல்பை!
மேலாண்மை கொள்ள
விசயம், பலம், ஆற்றல் இன்றி
கீழான வார்த்தைகளால்
உனது கிழிந்தமனம்,
சீழ்ப்பிடித்த சிந்தை,
அழுகிய சிந்தனைகள்,
தாழ்ந்த குணம்,
நாற்றம் குறையா மலஇதயம்,
காட்டி….
எனது துகிலைக் களைய ஏங்கி,
கூத்திட்டாய்…
உன்வேட்டி அவிழ்ந்ததும் அறியாமல்…!
கோமணம்நீ கட்டாது வந்ததுவும் தெரியாமல்…!!
நான்தானுன் மானத்தை….
அவிழ்ந்தவேட்டி தனைஎடுத்துப்
போர்த்து மறைத்தேன்!
பொய்யனுன் பிழைபொறுத்தேன்!
ஏனென்றால் வெளியேயும் உள்ளேயும் ‘நண்பன்’யான்!
நானுள்ளும் புறத்தினிலும் வில்லனல்ல..
‘நாயகன்’தான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply