குற்றம் கடிதல்.

 

கத்தியின்றி இரத்தமின்றிக் கணமும்…முக 
நூலில் …’வாய்
யுத்தம்’ புரிந்துலகை ஊரைத் திருத்திவிட 
கத்திக் குளறி, 
‘சரி –பிழைக்கு’ ஆதரவாய் 
குத்தி முறிந்தபடி,
குமுறி வெடித்தபடி,
வெத்துவேட்டாய்ப் பொங்கி,
வீம்பெழுதி, 
நடைமுறையில் 
வரலாற் றறிவின்றி,
யதார்த்தப் புரிதலின்றி,
ஒருகல்லைக் கூட உருட்டும் துணிவின்றி,
ஒரு ரூபாய் நல்கி உதவும் மனமின்றி, 
செயலிலெதும் காட்டும் திறமையின்றி,
உண்மையான 
உயர்வுக்கு ஏங்கும் உள்ளமின்றி, 
‘இணைய —மானப் 
போர்வீரர்’ தாமென்னும் 
‘சிலர் ‘….
முகநூற் பொருகளத்தில்… 
தாம் சொல்வதை மட்டும் தரணி ஏற்கவேணும் என்பர்!
வேறெதிர் கருத்துரைப்போன் 
விசரன், மடையனென்றும் 
பாய்வார்!


குறுமதியர் பிறரின் சுதந்திரமாம் 
உள்வீட்டில் (பெட்டியில்) நுழைந்து உப்பு புளி பருப்பு 
உள்ளியெங்கே….? என்றலசி 
தம்வீட் டடுப்படியில் 
பூனை உறங்குவதைப் 
புரியாமல் புரட்சிசெய்வார் !
“யார் தாங்கள்?
தங்கள் தகமை தரம் என்ன ?
யார் அங்கீகரித்தார்கள் ?
யார் அனுமதி தந்தார்கள்?” 
ஏதும் கவலையின்றி எழுதிக் குவித்திடுவார்!
கருத்தொன்றை கூறும் தகுதி, 
அவ்விடயத்தில்
அறிவாற்றல், அனுபவங்கள் ,
தமக்கிருக்கா? என்றறியார்….
பொறுப்புணர்வு, ‘சமூகப் பய–பக்தி’ ,
குற்றஎண்ணம்,
கருத்துக் சுதந்திரத்தின் கரை,எல்லை,
புரியாமல்….
அடிப்படை நாகரீகம் அற்று,
பண்பாடு விட்டு,
நடுநிலைமை கெட்டு,
‘தமைப் பிரபலப் படுத்த’ 
எது சொல்லவும்… அஞ்சார்!
விளைவைஎண்ணார்!
தமை இயக்கும் 
அரசியலுக் கேற்ப அறம்மறந்து…. பொய்புனைவார்!
வரலாற்றை தத்தம் 
விருப்புக்கு மீள் வனைவார்!
இணைய வசதியொடோர் கணணியோ….

‘ஸ்மார்ட் போனோ’… 

இருந்தாலே போதுமிவர்…. தாமே 
வல்லரச(சுர) ரென்பார்! 
தெருவெளிச் சண்டியரை விடத்தாழ்ந்து; 
நான்கைந்து 
‘போலிக் கணக்குகளில்’ புதைந்தொளிந்து; 
எதிர்ப்போரில் 
காழ்ப்புணர்வைக் கொட்டி, சேறுபூசி, 
சமூகநன்மை 
நோக்கிடா தியங்கி,
‘நோகா திருந்தபடி’
வாய்வீச்சில் உலகம் மாறுமென்பார்!
இவர்கள்….நிதம் 
பரப்புகிற இணைய வன்முறைகள் ,
பொய்புரட்டு ,
பொறுக்கித் தனம் புரிந்து 
தம் இலாபம் பார்த்திடுதல்,
மிரட்டல்,
பிறரை இழிவுசெய்து பழிவாங்கல் ,
பிறர்கருத்தை மறைக்க 
விடும் முகநூல் சேட்டைகள்,
பிரித்தாழு வோர்க்குதவல் ,
பிழையாய் வழிநடத்தல், 
உயிர் அச்சுறுத்தல் விடல், 
வார்த்தைகளால் கற்பழித்தல் ,
எழுத்துக் கொலை புரிதல், வசைபாடல் ,
பொய்யாய்ப் புகழ்ந்து 
உசுப்பல்,
‘உள்ளதொன்றை இல்லை’யென்றே உறுக்கல் , 
‘எவையுமிலா ஒன்றை இதே…எல்லாம்’ 
எனப்பரப்பல்,
இவையாவும் ….
‘சமூக வலைத்தளச் சொற் போர்க்களத்தின்’
‘போர்க்குற்றங் கள்’ என்பேன் !
இவற்றை விசாரித்துத் 
தீர்ப்புரைக்க….
உள்நாட்டு வெளிநாட்டுப் பொறிமுறைக்கு,
நீதி பதியெவர்க்கு, நேரவேண்டும் ?
நானறியேன்!
ஓரிரண்டு முகநூல் போர்க்குற்ற வாளிகளை 
கண்டறிந்து தண்டிக்கத் தவறின் 
இதுவரைக்கும் 
துன்பமேற்று போராடிச் சுமந்த 
மனிதநீதி 
கீழிறங்கி வீழுமென்பேன்!
இந்நிலையை மாற்ற….’அறப்–
போராளி கள்’ நீதி நடுநிலைமை யோடு….உண்மைப் 
‘பேராண்மை’ செய்து ,
‘ஊராண்மை’ காத்து ,…’ஞான 
வீரமுடன்’….
‘முகநூல் வெளிக்கு’ வரவேணும் …என்பேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply