சிறை (த்) தாய்

ஒருவேளை முக்குருத்தில் ஒன்றே
வளர்ந்துயர்ந்து
இருநூறு கோடிசேர்த்து
எக்கடனும் அடைத்திருக்கும்….
ஏன் அதற்குள் மரணத்தை இவைக்கும்
பரிசளித்தாய்?
“துணைக்கு நின்றாலும் பிணைக்கு நில்லாதே”
எனும்வேதப் பொருளறியா தின்று
குடும்பத்தைக்
காவு கொடுத்தாய்!
கவிந்த கடன் மழைக்காய்
ஏன் ஏதும் அறியா
இளமைகளைப் பலியிட்டாய்?
தூக்கிய சுமையிறக்க முடியா
வலி திரண்டு
தாக்க …
அதிலிருந்து தப்ப வழி அற்று ….அதோடு
மோதாது…. தானைமாய்த்து தப்பினான் முன்
நின்….கணவன்!
நீசுமக்க முடியாது திண்டாடி,
கடன் தந்தோர்
கோபம் குறைக்க உதவியின்றி,
இவ்விடர்த் தீ
தாண்டச் சா வழிதான் சரியென்றாய்!
ஐந்தகவும்
எட்டாத மூன்று இளமை களிலும்…ஊர்
திட்டமிட்டு இச்சுமையை திணிக்கும்
எனப்பயந்தா….
கட்டாயம் அவர் வாழ்வு சீரழியும்
எனநினைந்தா….
அவர்களுக்கும் சாவை அருளினாய்?
‘கடன்’, ‘பொறுப்பு’
என்னவெனப் புரியாத,
‘உம் தவறை ‘ உணராத ,
கவிதைகள்….
பால்வாசம் கடக்கா
கொழுகொழென்று
பூத்த புதுமலர்கள் ….
புதிரான மரணத்தை
நேற்று தகப்பனின் ‘நித்திரையில்’
மட்டுந்தான்
பார்த்தவைகள்….
சாவின் சுவையைப் பழகாத
பாலகர்கள்….
விரும்பும் ஐஸ் க்ரீமை
கசக்கிறது
வேணாம் எனஒதுக்க வீம்புக்கு
பருக்கிவிட்டு
துடிதுடித்து ஒருவயது, மூன்று, பின் நான்கு.
வயதுத் தளிர்கள் வதங்க
கண்டு இடியாது
மீதி ஐஸ் க்ரீமை விழுங்கி உயிர் துறந்தாய்!
கேட்ட கணமிருந்து
தலை கிறுகிறுக்க, நெஞ்சம்
ஏற்கா இக் ‘கூட்டுத் தற்கொலை’யின்
கொடுமைவாட்ட,
சீரணிக்க முடியா இச் செய்தி உறுத்த, மனம்
வாடுகிறேன்!
இத்தனை வலியை வழங்கியோர்கள்;
நம்பவைத்து கழுத்தறுத்து
நட்புக்கு துரோகமிட்டு
தம் இலாபம் பார்த்தவர்கள்;
“தடையற்ற பெருவாழ்வை
எங்கோ ருசித்துளாராம் இப்பாவப் பணத்தாலே”
என்றால்….அவர்களென்ன அறம் செய்தார் ?
கேட்கின்றேன்!
‘இவை ‘ செய்த பழிபாவம் என்ன?
விதித் தீர்ப்பு,
கடவுளது தண்டிப்பு, நீதி எங்கு தேடுகிறேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply