நேயம்

குழந்தையின் கரங்களிலே
குருதி கொட்டக் கிடக்குதின்னோர்
குழந்தையின் துண்டித்த கரம்!
அதனின் முகமெல்லாம்
இரத்தம்!
கண்ணிரண்டை விரித்துளது அச்சம், ஐயம்!
கன்னத்தில் நெற்றியினில் காயம்!
பொறுமையாக
குண்டு சிதறுகிற கொல்களத்தில்
மிகநெருங்கி
இந்தக் கொடுமையை மினக்கெட்டுப்
படம்பிடித்து
இந்த உலகெங்கும்
பரப்புதற்கு ஆட்களுண்டு!
“இந்தப் படங்களினை இனிப் பரப்ப வேண்டாமே
கண்டிப்பீர் போரை” எனக்
கதறுதற்கும் ஆட்களுண்டு!
இப்பிஞ்சின் கையிலுள்ள
மறுகையை பறித்து….அதனின்
இரத்தம் துடைத்து….
காயத்தில் மருந்திட்டு…
கண்ணிரண்டின் அச்சம் களைந்து….
அதனைக் காக்க,
இன்னும் அட்ட திக்கினிலும்
சிதையும் பிஞ்சுகளை மீட்க,
என்செய்ய வேண்டுமெனச் சொல்வதற்கு
எவர்களுண்டு ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply