ஓர் புள்ளிக் கோலம்

புள்ளியொன்றில் தொடங்கிடுது கோலம்.
புதிதாகப்
புள்ளிகளை வைக்க வைக்க
புலப்படுது புதுக்கோலம்!

புள்ளிகள் தொடர்ந்தால்…
புதிதுபுதிதாய்ப் படர்ந்தால்
எல்லைகளைத் தாண்டி எழுதிடலாம்
‘மா’க்கோலம்!
புள்ளியை அற்பமாய் புறக்கணிப்பின் ….
“அட சின்னப்
புள்ளி என்ன புள்ளி? ” எனப் புறந்தள்ளின் ..
பொதுக்கோலம்
இல்லாமற் போகும்!
என்னை ஒரு மிகச்சிறிய
புள்ளியாயே எண்ணுகிறேன்!
புவிகடந்து பிரபஞ்சப்
புள்ளிகளை இணைக்கின்ற
புரியாப் பெருங்கோலத் —
துள்… தோன்றும் ஓர் புள்ளி யான்
என்னைத் தவிர்த்தாலோ….
தள்ளினாலோ அக்கோலம்
ஒறு வாயாய்த் தானிருக்கும்
என்பேன்!
ஒருபுள்ளிக் கோலம் நான்
நிலைத்திருப்பேன்!

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply