எட்டா நிலவு

எட்டா நிலவுக்கு இன்னுமின்னும்
எத்தனைநாள்
கொட்டாவி விட்டுக்
குறண்டிக் கிடக்கவுள்ளோம்?
தொடுவானம் தாண்டித் தொலைவில்
வெகுதொலைவில்
படுத்திருக்கும் நிலவைப்
பரணிலேறி எட்டி எட்டி
பிடிக்கும் கனவில் பிடரி அடிபட்டு
விழுந்து கிடக்கின்றோம்!
“விடா முயற்சி உடையோம் யாம்
பழுத்த ஞானஸ்த்தர்” என்று பல சொல்லி
“விழும்….நாங்கள்
வீசும் கற்பனைக் கற்களுக்கு
நில”வென்று …ஊரை
நம்பவைத்து நிற்கின்றோம்!
நிலவை நினைத்து மந்திரம் ஜெபித்தபடி
உலவிவந்தால்…
கையில் உருண்டுவரும் நிலவென்று
சிலரைநம்ப வைத்து
ஜெயிக்கப் பழகிவிட்டோம்!
நிலவு விம்பம் கேணி நீரில்
விழுந்திருக்க
விலைகொடுத்து அதைவைத்தே
வியாபாரம் பார்க்கின்றோம்!
நிலவோ தொலைவில்….
நீட்டி நீட்டி நம் கைகால்
களைத்ததன்றி அதைத்தீண்ட
கனவிலேனும் எங்களிடம்
திட்டங்கள் இல்லை!
நிலவைச் சிறைப்பிடிக்கத்
திட்டங்கள் இல்லை! அதில்
சென்று…அதை வெல்வதற்கும்
திட்டங்கள் ஏதுமில்லை!
தெளிவாய் இவை அறிந்தும்
எட்டா நிலவுக்கு இன்னுமின்னும்
எத்தனைநாள்
கொட்டாவி விட்டுக்
குறண்டிக் கிடக்கவுள்ளோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply