நதிகளின் கனவுகள்

கடலுக்குப் புரியாது நதிகளது கனவுகள்!
கடல் தேடிப் பாய்ந்து ,
களைத்து வந்து ஆர்ப்பரித்து,
கடலோடு சங்கமித்துக், களித்து,
இரண்டறவே
கடலோடு கலந்தாலும்…
கடலாகிப் போனாலும்…
கடலுக்குப் புரியாது நதிகளது கனவுகள்!
கடலோ பெரும்பான்மை,
நதிகள் சிறுபான்மை,
கடலில் கலக்கையிலே
நதிகளும் உரைக்காதாம்
கடலுக்குத் தம் நிலைமை!
கடலும் அதைக் கேட்பதில்லை!
கடலில் கலந்தபின்பு நதிகளுக்கு ஏதுமுகம்?
கடலோடு கடலானால்
நதிகளுக்கு ஏது சுயம்?
கடலென்றும் கடல்தானே….
நதிகளென்றும் நதிகளாக
நடக்குமட்டும் தானே ….
நதிகளுக்குப் பெருமை வரும் !
கடலோடு கலப்பதே….
கட்டாயம் ஆனபின்பு
கடலோடு கலந்து விட்டால்
நதிகளது கனவழியும்!
கடலோடு கலந்தபின்….”தம்
கனவுகள் மதிக்கவே —
படவில்லை” எனநதிகள்
பதறி மட்டும் என்னாகும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply