வாழ்வில் தா ஒளி

உன்னடியே தஞ்சமென்று வந்து விழுந்தோம் –உந்தன்
ஒளிமுகத்தைக் கண்டு உள இருளைக் களைந்தோம்
எம் செயலில் ஏதுமில்லை என்று உணர்ந்தோம் –என்றும்
எல்லாமும் நீ பார்த்துக் கொள்வாய் என்று தெளிந்தோம்

நல்லையிலே கோவில் கொண்டு நாலு திக்கையும் –காத்து
நல்லவரம் யாவருக்கும் நல்கும் நின் கரம்
பல் பிடுங்குவாய் துயரப் பாம்புகளுக்கும் –நிதம்
பார்த்து அணைப்பாய் எமை எத் தீமை நெருங்கும்?

காலம் மாறும் போதும் நீயும் மாறவுமில்லை –ஊரில்
காட்சி மாறும்…உந்தன் ஆட்சி சோரவுமில்லை
சீலம், சக்தி, எழில், அருளும் தேயவுமில்லை –உந்தன்
தேரடியில் வீழ்ந்த யாரும் தாழ்வதுமில்லை!

நாளை எவ் இடர்கள் தீண்டும் போதும் நின்று நீ –ஞானம்
நல்கி, நீழல் நல்கி, இடர் மீது மூட்டு தீ
சூழும் சூரர் மாயை மாய்க்க வந்து வேலெறி –தேவர்
தொல்லை தீர்த்த மாதிரி எம் வாழ்வில் தா ஒளி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply