நிழலென நீங்கான்

தலையினைக் குறி வைத்திடும் வேட்டினை 
தலைப் பாகையோடு சென்று விழ வைக்கும் 
கலை அறிந்தவன் கந்தன்…! உளத்தினால் 
கசிந்து உருகி அழைக்கும் அடியவர் 
மலைத் துயர்கள் முகிலாய்க் கலைந்திட, 
மனக் கவலைகள் மாய்ந்தே மடிந்திட, 
பல புதுமைகள் கணமும் நடத்துவான்!
பாச நிழலென நீங்கான்…தொடருவான்!

நல்லை வேலவன் நாமத்தைச் சொல்கையில், 
நாயகன் கோவில் வாசலைக் காண்கையில்,
வல்ல ஞானிகள் வழுத்தித் தவம் செய்த 
மணல் நிறை வீதி வீழ்கையில், தேரடி 
வில்வ மரத்தடி நீழலில் ஆறையில், 
மின்னும் கேணி அருகில் அமர்கையில்,
சில்லறை இட்டு அருச்சனை செய்கையில்,
சீவன் ஆனந்த எல்லைக்கே செல்லுமாம்!

சிக்கல் சிலந்தி வலைக்குள் அகப்பட்டு 
சிந்தை இருண்டு செயல்கள் வரண்டு வாய் 
விக்கி நீரினைத் தேடித் தவிக்கையில் 
வேல் முகம் தனை ஓர்கணம் எண்ணினால்…
அக்கணம் மனதுள்ளே தெளிவெழும்!
அகக் கவலை கற்பூரமாய்த் தேய்ந்திடும்!
“பக்குப் பக்கெனும்” இதயப் பயம் அறும்!
பதட்டம் பனியினைப் போல அகலுமாம்!

இடரைத் தீரென் றிறைஞ்சிக் கதறினால்…
“இதைக் கொடு இதைச் செய்யப் பொருத்தமாய் 
விடைகொடு” என வேண்டினால்…சூழ்கிற 
வில்லங்கம் வீழ்த்தி; விதியின் வழியிலே 
இடர்கள் ஓட்டி எமக்கெது தேவையோ 
எவை பொருத்தமோ தருவான்! நாம் கேட்டாலும் 
உடன் படாததை நல்கான்…நாம் கேட்காத 
உயர்வு நூறை அருளுவான்….போற்றுவோம் !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply