அவதிப் புள்ளி
பாவத்தின் கூலி மரணமென நீ சொன்னாய்!
பாவத்தின் கூலி மரணம்
எனும் மறைநூலும்!
பாவங்கள் செய்யாதோர் பாரினிலே யாருண்டு?
பாவங்கள் யாவுக்கும்
மரணமா பதிலிங்கு?
பாவத்தின் எந்தப் புள்ளி
மரணத்தின்
ஆரம்பம் என்று அறிந்திடுமோ ஊருலகம்?
பாவத்தின் எந்த மட்டம்…
அவதிமட்டம்
கூட்டிவரும் சாவை என
குறிப்புரைத்தாரோ எவரும்?
செய்கின்ற பாவத்தின் நிரம்பலெல்லை
மீறினாற்தான்
வையத்தில் மரணம் பரிசாகும்
எனச்சொன்னாய்….
அந்த எல்லை நீயும் அறிவாயா?
சாவை நல்கும்
அந்த இரகசியத்தை
எனக்கேனும் சொல்லாயா?