மரண வலை?
மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை?
நீண்ட தனிமை
நிதான ஒடுக்கங்கள்
தாண்டிப் பழையபடி
தன்னிசையை மீட்க…அன்று
நரம்பறுந்த யாழ்…நரம்பைச் சீர்செய்து
உடல் திருத்தி
சருதிசேர்க்க நின்று
துயர்துடைக்கும் வேளையிலே…
மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை?
நான்கு திசைக்கும் நடுவில்
ஊர்களெல்லாம்
கூடுகிற புள்ளி தொற்றிடமாய் கொத்தணியாய்
மாறியதோ?
அங்கே வாங்கியோரும் விற்றோரும்
காவிகளென் றானாரோ?
எவரெவர்கள் எப்போது
எங்கிருந்து வந்தாரோ?
எங்கெங்கு சென்றாரோ?
எங்கெங்கு இச்சாபம் பெற்றோர்
ஒளிந்தாரோ?
இந்த வலை நிஜமோ? குழப்பமோ?
நிஜமென்றால்
இந்த வலையை எங்கு எவ்வாறு எப்போது
நின்றறுத்து எம் ஊர்கள் நிமிரும்…..
யார் சொல்வாரோ?