பெளர்ணமிப்பா!
உடலின் அசதிக்கும்;
உயிர் மனது பகல் முழுதும்
அடைந்த வலி காயம் அத்தனைக்கும்;
ஒத்தடங்கள்
கொடுத்துக்கொண் டிருக்கிறது
தன்(ண்)ஒளியால் குளிர்நிலவு!
அதன்துணையாய் யாவரையும்
அரவணைத்து வருடிடுது
இதக் காற்று!
சாமரங்கள் வீசும் மரக்கிளைகள்!
எதனிலும் எங்கும் இருட்டே இறைந்ததனால்
வானில் பலவடிவில் கோலமிட்டு
அழகுகாட்டும்
நாலு வகைமுகில்கள்!
நாற்திசையைத் தாலாட்டும்
தூரத் திருந்து துளிர்க்கும்
நாத சுரகானம்!
காதை மனதைக் கழுவும்
திரை கீதங்கள்!
இத்தனை எளிய இதச்சூழல்
இன்னும்தான்
பத்து மடங்கு பரவசங்கள் கொள்ள
ஊரை
இத்திசையை உயிர்க்கவைத்து ஒளிரவைக்கும்
என் கவிதை!