இயல்பை முடக்கும் எமன்

கண்கள் அறிந்திடாச் சின்ன உயிர் எமைக்
கட்டி அவிழ்த்து நிற்கும்- எங்கும்
காற்றாய்க் கலந்திருக்கும்- முகம்
தன்னில் முகமூடி போட வைக்கும் கரம்
தழுவவே தொற்றி ஏய்க்கும்- எங்கள்
தலையைக் குறியும் வைக்கும்!

எங்கோ பிறந்தின்று எங்கள் படலைக்குள்
இலகுவாய் வந்ததிது- இன்றெம்
இயல்பை முடக்கிடுது- அட
பொங்கிப் பரவுது சந்தை, கடை, தெரு
பூராய் அதன் வரவு-உயிர்
போகும் அதால் சிலது!

யாரிடம் உள்ளது யாரிதன் காவிகள்
யாருக்குத் தொற்றிடுமோ?- நாளை
யார்யாரைப் பற்றிடுமோ- இனம்
காணும் பொழுது தனிமைப் படுத்திடில்
காரம் குறைந்திடுமோ? – உயிர்க்
காவு எடுத்திடுமோ?

தும்மல் தடிமன் தொடர்காய்ச்சல் என்பன
தோன்றும் அறிகுறிகள்- சிலர்க்
கில்லை இத்துர்க்குறிகள்- தொற்றி
பம்மிப் பெருகி பல மடங்காகியே
பக்கத்தில் நிற்பவர்கள்- மீதும்
பாயும்…அணி தடைகள்!

வாய் மூக்கு வாசலால் வந்துமே தொண்டையில்
வாழ இடந்தேடும்- பல
வாறாய் உருமாறும்- நுரை
ஈரலில் கூடுகள் கட்டிப் பெருகியே
எம் சுவாசம் தடுக்கும்- தாக்கி
இதயத்தையும் நிறுத்தும்!

இளமையுடன் மோதி எதுவுமே ஆகாது
என்று முதுமையுடன்- முட்டி
இறப்பருளும் அசுரன்- இதை
முழுமையாய் எங்களின் முற்றத்தினை விட்டு
முயன்று விரட்டிடுவோம்- நடை
முறை மாற்றியே ஜெயிப்போம்!

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply