மனிதம் என்று மீள்வது?

இப்படியோர் காலம் மீண்டும் எழுந்ததிங்கு!
துப்பாக்கி பூபாளம் பாடிய
துயர் நாளில்
கூடித் திடீரென்று குண்டுவிழும்.
வேட்டதிரும்.
சாவரக்கன் ஆட
சண்டை பலியெடுக்கும்.
எம்மோடு அருகில் இருந்த உயிர் துடித்து விழும்.
சம்மதத்தை கேட்காது
சா எவரையும் விழுங்கும்.
இந்தத் துயர்மீண்டும் வாரா தென இருந்த
சந்தோசம் சாக
தரணியெங்கும் படையெடுத்த
நோய்ப்பேய் எங்களது முற்றத்துள்ளும் நுழைந்து
வாய்வைத்துத் தின்னத் தொடங்கிற்று!
வலி தொலைந்த
வாழ்வை, வசந்தத்தை,
வரமான உறவை நட்பை,
ஏதும் கவலையற்று எம்மோ டிருந்தவரை,
போனவாரம் மட்டும் புழங்கித் திரிந்தவரை,
நோய்தொற்றி;
நொந்து நொடிய வாட்டி;
சிலநாளில்
பேச்சு மூச்சை நிறுத்தி; பிணமாக்கி;
உறவுருத்து
ஓர்முறை கடைசியாகப் பார்க்கவும் விலக்கி;
யார்க்கும் தெரியாமல்
அடுத்த ஓரிரு மணியில்
‘எரியூட்டி’ ஏற்றி எரித்துமே பஸ்பமாக்கி;
வரலாற்றை முடிவுறுத்தும் கதை
தினமும் கூடிடுது!
பாசமொடு அன்பு பண்புறவு என இருந்த
நேசமும் அருகில்
நெருங்க முடியாத…
ஓர்தடவை இறுதியாய்த் தொடக்கூட இயலாத…
தூர இருந்து ‘பெட்டியினை’
மட்டும் தான்
பார்த்து அழகுருவை பாராது
இறுதி வழி
அனுப்பிவைக்கும் படலம்
அனுதினமும் நடக்கிறது!
கனவல்ல இது நனவே…
கண்டு கையால் ஆகாது
புதுமை நவீனம் புரட்சியெல்லாம்
கைபிசைந்து
மதி வெம்ப மருள்கிறது;
மனிதம் இதால் மீள்வதென்று?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply