வெற்றிடங்கள்

வெற்றிடங்கள் ஏதும் வியனுலகில்,
இயற்கையதில்,
சற்றும் வராதென்று
சாற்றும் ‘நரன் விஞ்ஞானம்’.
வெற்றிடம்…வளி,நீரில்
விறுக்கென்று ஏற்பட்டால்
சுற்றயல் திசையிருந்து சுறுக்காய்
வரும் வெளியை
முற்றாய் அவை அவை நிரப்பும்;
இது ‘இயற்பியலின்’
அற்புத தத்துவம்!
அகில உயிர்களிலும்
இறப்பழிவால் ஏற்படும் இடையறாத
வெற்றிடங்கள்
பிறந்த புதுஉயிரால்,
பின்தொடரும் இளமுயிரால்,
நிரப்பப் படும் இதுவும்
நிலைத்த ‘உயிரியல்’ வேதம்!
இவ் இயற்கைச் சமநிலையில்
புவி தோன்றி இன்றுவரை
எவ்வளவு கோடி உயிர் தோன்றி இறந்திருக்கும்?
எத்தனை கோடி நரர் உதித்துமே செத்திருப்பார்?
அத்தனைக்குப் பின்னும்…
ஆயிரம் கோடிகளாய்ச்
செத்தழிந்த பின்னும்…முற்றாய்ச்
சிதையாமல்
ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப் பட என்றும்
உயிரிகளும் மானுடமும்
உலகில் நிலைத்து நிற்கும்!
இயற்கையில் யார் எவரால்
இடைவெளிகள் தோன்றி விடும்?
உயிர்களின் மறைவும்
அவற்றின் அறிவிழப்பும்
பெரிது!
அது மீள நிரப்ப ஏலா பேரிழப்பு!
அரிது அவை பெற்ற அனுபவங்கள்!
ஆனாலும்
இறப்புக்கு அஞ்சலித்துக் ’காலவிதி’
இயல்பாக
நகர்ந்த படியிருக்கும்!
இதுதான் நிஜம் யதார்த்தம்!
என்றாலும் இந்த இயற்கை வாரோட்டத்தில்
முன்னுதா ரணமாய் முயன்று
அதிர்வுகளை,
தாக்கத்தை, செயற்கரிய சாதனையை,
புதிய மடை
மாற்றத்தை, செய்த மகத்தான மிகப்பெரிய
ஆற்றலரின் இழப்பால்
இயற்கையும் அதிர்ந்தேபோம்!
ஏற்க முடியாது இதை என்று
விதி துடிக்கும்!
நீற்றாக்கி, உக்கவைத்து, நிஜம்
அவரின் உடல் மறைக்கும்
கூற்றாகி நின்றாலும்…குவலயத்தில்
செயற்கரிய
செய்தவரின் ஆளுமை வெற்றிடங்கள்
என்றும் சீர்
செய்யப் படாமல்,
சிறிதும் நிரம்பாமல்,
இருக்கும்!
இவர்பேர் தொடர்ந்திலங்கும்!
என்றென்றும்
வரலாறு இவர்புகழின்
வெற்றிடத்தைத் தக்கவைக்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply