எவரால் இயலும்?

சமூகம் ஒரு திமிர்க்குதிரை…வேகம் கொண்டு
தடைமீறிக் கட்டறுத்துப் புயலாய் மாறச்
சமயம் பார்த்திருக்கு(ம்) நெடுங் குதிரை…ஊரைச்
சாய்க்க அஞ்சா பெரு முரட்டுக் குதிரை…இந்தச்
சமூகமெனும் குதிரையினை அடக்கி ஆள,
சரியான வழி ஓட்ட, பயனைக் கொள்ள,
இமைப்பொழுதும் அஞ்சாது மேய்க்க, யாரால்
இயலும்? அவர் புகழ் என்றும் ஆளும் ஊரை!

மேய்க்க வந்து மேய்பட்டுப் போனோர் தானே
மிக அதிகம்; அதை அடக்க அதன்மேல் ஏறிப்
பாய்ந்து அதன் சேணத்தைப் பிடிக்கக் கூடப்
பழகிடாது வீழ்ந்தவரும் …பிடித்து ஏற,
சாய்த்து அது காலாலே உதைய நொந்து
தளர்ந்தவரும்….அதில் ஏறப் பின்னால் ஓடி
மாய்ந்தவரும்…தான் அதிகம்! மடக்கி ஏறி
வழிப்படுத்திச் சவாரி செய்தோர்…மிகவும் சொற்பம்!

நேற்றதனை மிரட்டி ஆழ நினைத்து வந்தோர்
நிழலுமற்றுப் போனார் காண்! துவக்கைக் காட்டி
கூற்றுவர் யாம் என்றடக்கப் பார்த்தோர் …தூரம்
கொஞ்சம் சென்று அகன்றார் காண்! சகுனி போலே
போற்றி அதைத் தடவி ஏறி அதனை வைத்துப்
பிழைத்தவர் போய் மறைந்தார் காண்! எதனைச் செய்து
காற்றான அதை அடக்கி அதனைக் கொண்டு
காரியங்கள் ஆற்ற யாரும் வருவாரோ தான் ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply