சொல்

ஒளிகுறைந்த கண்ணினாய் ஆனாயே!
உறுதி கொண்ட தோள்நொடிந்து போனாயே!
களிபடைத்த மொழிமறைந்து வீழ்ந்தாயே!
கலக்கமூறும் நெஞ்சினோடு வாழ்ந்தாயே!
தெளிவுபெற்ற மதியிழந்து தோற்றாயே!
சிறுமைகொண்டு தலைகுனிந்து தாழ்ந்தாயே!
எளிமைகண் டிரங்கிடாது சாய்ந்தாயே!
இருப்பவன் பின் சென்றிறுந்து தேய்ந்தாயே!

வழிமறந்து போனதேனோ உன்கால்கள்?
வடிவுலர்ந்து போனதேனோ உன்மேனி?
பழிசுமந்து தேய்ந்ததோ கொல்…உன்கைகள்?
பருவம் மீறிப் பாய்கிறதா..உன்காமம்?
உளிநிகர்க்க வேண்டுமடா உன்வார்த்தை.
உருச்சிதைந்து போனதேனோ உன்வாழ்க்கை?
விழி திறந்து பாரடா…நின்முன் ஈனம்
விதியை மாற்றிடாது யார்க்குக் கண்தானம்?

தருமமொன்று உள்ளதை நினைக்காய் நீ.
தவிசழிந்து போனதை மறந்தாய் நீ.
மருமம் சூழும் போதும்…தட்டிக் கேளாய் நீ
மனது போன வழியில் மட்டும் போறாய் நீ.
கருமம் நூறு காத்திருக்குச் செய்யாய் நீ
கடவுளுக்கும் கடவுளென்றும் சொல்வாய் நீ.
வரங்கள் வாங்கத் தவங்கள் செய்திடாயாம் நீ
வலுவிழந்துன் வசமிழக்க லாமோ நீ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply