ஒரு பொறிச் சூரியன்

யுகஇருள் கிழிக்க முதன்முதல்
மொட்டவிழ்த்த
ஒருபொறிச் சூரியனாய் நீபிறந்தாய் நம்முன்னே!
அதுவரை ஆட்சிசெய்த
அகப்புற இருள்…ஒரு
கணத்தில் நடுங்கிக் கலங்கிற்று.
‘இனித்தனது
ஆட்சிக் கிடமில்லை’ என மூட்டை கட்டிற்று.
காலாதி காலமாய்க் கற்பித்த அர்த்தங்கள்
கேள்விக்குள் ளாவதனைக் கண்டு
மிகமிரண்டப்
பொறியை அணைக்கப் பொருதிற்று.
எழுந்த துளி
ஒளியில்…குருடான விழிகள்…மிகமயங்கி
திறக்கமிகக் கஷ்டப் பட்டபடி கூசினவாம்!
பொறிமொட்டு மெல்ல முகையவிழ்ந்து
பூவாகி
விரிந்துபல பூக்களினைக் கொண்டபூந்துணராகி
பிளம்பொன் றாகி அடிமுடிகளே அற்ற
பேரொளியாய்…இந்த
பிரபஞ்சம் முழுதொளிர
விஸ்வரூபங் கொண்டபோது…விகசித்த ஒளி
இருளை
முழுதாய்க் கலைத்தபோது… மூடுமந்திர மாக
கிடந்த அனைத்தும்
தெரியத் தொடங்கிற்று!
வெறுமிருட்டில் பிண்டங்கள் ஆக
இருந்ததெல்லாம்…
‘எழில் குலுங்கும் – தமைத்தாமே’
கண்டு வியந்துநிற்க…,
முழுஒளிக்குக் கண்கள் பழகி
அட்டதிக்கைத்
தரிசிக்கத் தக்க தகைமைகளை
விழிகளெல்லாம்
பழகிவிடப்…பாரே பளீரிட்டு ஒளிர்கிறது!
யுகஇருளுள் மூச்சற்று ஊமைகளாய் இருந்தோர்கள்
அகப்புற விழிதிறந்து
ஆரவாரங் கொண்டெழுந்து
இசையாய் கவிதைகளாய்ப் பாட்டுகளாய்
தம்உணர்வின்
அனைத்து ‘இரசங்களையும்’ துய்த்து மகிழுகிறார்.
எங்கும் மகிழ்வும்
இரசிப்பும் பரவசமும்
தங்கிற்று:
இந்தச் சரிதம் படைப்பதற்கு
காரணமாய் நின்ற முதற் பொறியை
எங்கே தேடுவது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply