காவலர்கள் எங்கே?

கடைசித் துளிஇரத்தம் கூட வடிந்திறங்க
உடல்களைக் கொத்திக்
குதறின காகங்கள்!
துண்டாடப் பட்ட கரத்தை…தன் குட்டிக்குக்
கொண்டோடிற்று..நேற்றும்
நின்காலைச் சுற்றிய நாய்!
இரத்தமோப்பம் நுகர்ந்து வந்த நரி ஊழையினை
வரவேற்று எழுந்தன
ஏழெட்டு ஊழையொலி.
வெறித்த விழியில் மிஞ்சிக் கிடந்தஒளிப்
பொறியைக் களவாடிப் போயிற்று
அமாவாசை
இரவு வயிறு கிழிபட்டு இழுபட்ட
குடலிலே மாலைகட்டி ஆடிற்று வரலாறு.
இப்படியாய் என்முற்றம் நித்தம் இரத்தத்தால்
மெழுகுண்ட காலைகளில்…
சூனியக் காரரிடும்
கோலங்களைப் போட்டுக் குறிசொல்லிற் றுக்காலம்.
வேட்டோசை தைத்து
விடிந்த பொழுதுகளில்
சொரிந்த அவிப்பொருளால்… ‘சுகம்விளையும் யாகத்தின்
இறுதியிலே’ என்று இருந்த
நொந்த மானிடரை
விரட்டி ‘யாகம் கலைத்து’
அயலையெல்லாம் சூறையாடிப்
போனார்கள் யாக அனலில்
திரண்டெழுந்த
அசுரர்கள்
எங்கேதான் தொலைந்தன நம் தெய்வங்கள்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply