நிகழ்காலம்

யுத்தம் புசித்து மீந்த எலும்புகளாய்…
யுத்தமோ சப்பித்
துப்பிவிட்ட சக்கைகளாய்…
யுத்தம் கடித்துக் குதறிவிடக் குற்றுயிராய்
வாழ்வை இழந்து சாவை
வரவேற்கும் குஞ்சுகளாய்…
ஊரும் எமது உறவுகளும் மாறிவிட,
பேரும் எமது பெருமைகளும் நாறிவிட,
காய்கனியை இழந்தன
கிளைமுறிந்த விருட்சங்கள்!
கூடும் குளுமையின்றிக் குறுகினதான் தோப்புக்கள்!
சிறகே சிறையாகச்
சிதைந்தனகாண் பறவைகள்!
இறைச்சியாகப் பார்க்கப் பட்டனவாம்
விலங்குகள்!
கவிதைகள் தீண்டாமல் கருகினவாம் காகிதங்கள்!
கவிஞர்கள் இன்றி மரித்தனவாம்
காப்பியங்கள்!
உயிர்ப்பைத் தனித்துவத்தை
இழந்தொலித்த யாழ்குழல்கள்!
கயிறாகத் தொங்கும் கனவு:
இதுதூக்குக்
கயிறென் றறியாமல் தாலியென்றார்…
நம்மவர்கள்!
மனித உரிமைச் சாசனத்தில் மட்டுமுள்ள
மனித உரிமைகளால்…
மனிதர் தாம் எனமறந்து

மனிதம் தொலைத்தபடி வாழ்கிறது மனிதநேயம்!
பலவீனப் பட்டு நோய்தொற்றி
சத்திழந்து
தொலைந்து நிறைவேறா ஆசைகளால் நொடிந்து
துடிக்கிறது வாழ்வு…நமை
புதைக்கக் குழிவெட்டும்
கைகளுக்கு மண்ணள்ளிக் கொட்டி
உதவி…நாங்கள்
‘உங்களுக்குக் கோபுரங்கள் கட்ட முயல்கின்றோம்’
என்போரின் தூண்டில்..முள்ளில்,
சிக்குதின்றும் எங்கள்வாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply