இன்னும் பறக்குமா இப்பறவை?

இந்தப்பறவை இன்னுமின்னும் பறக்க
சிறகை விரிக்கிறது
சிறிதும் களைப்பின்றி!
இவ்வளவு தூரம் பறந்து
இளைப்பாறி
இப்போது மீண்டும் எழுகிறது
போதுமான
ஒளியும் மிதமான காற்றும்.. அமுக்கமதும்
வழியை அடைக்காமல்
வாசல் திறப்பதனால்
புத்துணர்ச்சி பூண்டு இப்போ கிளம்பிற்று!
போகவுள்ள தூரமென்ன?
போயடையும் இலக்கு எது?

ஏது வழி இருக்கு
இவற்றை அறியாது
சிறகிலின்னும் வலுவிருக்கு என்ற திமிரோடு
பறந்து கொண்டிருக்குதிது!
காற்றழுத்தம் கூடாமல்
முகில்திரண்டு மழையாய்
புயலாய் சூறையதாய்
இடிமின்னல் வெடித்துச் சிதறாமல்
இருளாமல்
அதிகவெயில் வறுத்து இறகிற்தீ பற்றாமல்
இருந்தால்…
இன்னும் இயலுமான உயரத்தை
அடைந்து எதிர்பார்த்த இடங்கடந்து
மிகுசொர்க்கம்
ஒன்றையே சேர்ந்து உயர
உள் இதயத்தைத்
தூண்டும் ஒரு பொருளால் துவளாமல்
இறகிளைத்துப் போகாமல்
கண்ணிருண்டு உடல்களைத்துச் சோராமல்,
இப்பறவை
இன்னுமின்னும் பறக்க
இறகை விரிக்கிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply