புவியென நிதானம் கொள்!

மாற்றங்கள் கொள்ள வேண்டும்
மனதை ஓர் முகப்படுத்தி
ஆற்றிலே நீர் போல் உள்ளம்
அலைவதை நிறுத்திப் பாயும்
காற்றென எண்ணம் ஆடிக்
களைப்பதை ஒடுக்கி என்னைப்
போற்றி என் கட்டுள் நானே
வைத்திடும் புரட்சி வேண்டும்!

அவசரம் வேகம் கொண்டு
அவிழ்க்குமோர் செயலாற் சொல்லால்
கவலைகள் படுதல் தானே
கைக்குமேல் பலனாய் ஆச்சு?
அவலங்கள் தவிர்க்க …. ஆறி
ஆய்ந்து கால்வைத்து …. இந்தப்
புவியென நிதானம் பூண்டு
பொறுத்தர சாள வேண்டும்!

தூண்டினால் உணர்ச்சி துள்ளி
துடித்துமே வசமிழந்து
ஆண்மையை தவற வைக்கும்
அசிங்கத்தை அணிய வைக்கும்
வீண்கோபம் கிளரவைக்கும்
மென்மனம் தனைச் சிதைக்கும்
ஏனிது?உணர்ச்சித் தீயை
ஒழுங்காக்கு உனைச் சமைக்கும்!

மாற்றங்கள் கொள்ள வேண்டும்.
மனம்போன போக்கில்…கால்கள்
சேற்றிலே சென்று சிக்கும்
சிறுமையைத் தவிர்த்து… வாழ்வு
காத்திருக் கென்று எண்ணி
பொறுமையுங் காத்து… நேரம்
வாய்க்கையில் வாகை சூடும்
வரம் பெற முயல வேண்டும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply