சர்ப்ப இரவு!

அகாலம் கடந்து அரையும் கரும்பாம்பாய்
நகர்கிறது இரவு
நாக்கிரண்டை நீட்டி நீட்டி
‘புஸ்’ என்ற சீறலொடும் மூச்சின் இரைச்சலொடும்
பாம்பு நகர்வதென
இரவின் சிறு அசைவும்
இனங்காண முடியா இரைச்சலும்
காற்றதிர்வும்
கேட்கிறது பாம்பின் பளபளக்கும் கண்ணிரண்டாய்
தெரிகிறது தொலைவில்
மினுங்குமிரு விண்மீன்கள்!
என்மீது நகரும் பாம்பிரவின் வயிறிப்போ…!
என்மீது வால்நகர்ந்து
பாம்பு வெளியேற
மெல்ல ஒளிகிளம்பும் கீழ்கிழக்கு வான்பரப்பில்!
பாம்பு பகலினிலே நகர்கிறதா?
இல்லையெனில்
பாம்பு பகலை விழுங்கிப்பின் உமிழ்கிறதா?
பாம்பு கிரகணம்போல்
பீடித்து விலகிடுதா?
எது நல்ல உவமையாகும்?
என்தை நான் யோசிக்க
பாம்பு பற்றி எங்கள் பரம்பரை பரம்பரையாய்
எண்ணத்தில் உள்ளஅச்சம் எழுந்து
இரவுதனை
அச்சமூட்டும்
பாம்பு வெறும் உவமை என மறந்துள்
அச்சமூறும்… மனம்பதறும்…
ஆதரவுத் துணைதேடும்!
பகலை இரவுப் பாம்பு விழுங்கி எம்
களைப்பைக் குடித்தெமக்குப்
புத்துயிர்ப்பை ஊட்டுவதால்
பயத்தோடு பக்தியும் இரவின்மேல்
கவிந்து வரும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply