தேர்தல்

பிழை என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று!
அவரவர்க்குப் பிடித்தவர்க்குப்
புள்ளடிப் பிழையிட்டு
அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்!
எஜமானை ஆக்கியவர்…
அடிமையாயும் மாறிடலாம்!
அதியுயர் அரசனே என்றாலும்
மிகமிகத்தான்
கடன்பட்டோன் என்றாலும்
ஒருவாக்கே போட்டிடலாம்!
ஒவ்வொருவர் தரும் வாக்கும்
திருவாக்காய் மாறித் திசைமுகத்தை மாற்றிவிடும்.
‘பிழை’ என்று அறிந்ததான்
புள்ளடி போட்டனரா?
“பிழைத்துப்போ” என்பதற்காய்
புள்ளடியைக் கீறினாரா?
அவன்சொன்னான்…“வேலைதந்தான் அவனுக்கு பிழைபோட்டேன்”.
இவன் சொன்னான்… “சலுகை தந்தான் இவனுக்கு கீறிவிட்டேன்”.
நீ சொன்னாய்…“என்சாதி அவனுக்காய் பிழைபோட்டேன்”.
அவர் சொன்னார்…“ஆழுகிறகட்சி அதால் கீறிவிட்டேன்”.
இவர் சொன்னார்
“நம் உரிமை மீட்பர்க்குப் பிழை போட்டேன்”.
ஒவ்வொருவர் ஒவ்வொன்றை எண்ணிஎண்ணி
வாக்குமிட
அவரவர்கள் எதுஎதனைத் தம்கொள்கை எனக்கொண்டார்?
முகத்துக்குப் பூசும் கரியை
விரல் நுனியில்
பூசி அனுப்பினார்கள்,
புள்ளடிப் பிழைபோட்டோர்
நரகத்தில் இருந்தென்று சொர்க்கத்தை மீட்டெடுப்பர்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply