பிரிவு

காற்றெமை விலகும் போது
புழுக்கந்தான் கடிதாய் வந்து
ஊற்றென வியர்வை தன்னை
உசுப்பியே பிறப்பித்தல் போல்
கூற்றெனுங் கண்கள் கொண்டோய்
பிரிந்திடத்…துயரஞ் சூழ்ந்து
நேற்றுப்போல் கண்ணீர் பொங்கி
நான் நீற வதைத்துப் போகும்!

பிரிவென்ற சொல்லின் அர்த்தம்
பிரபல மாச்சு உன்னால்
பிரிந்து நீ போனாய்… ஜீவன்
திரியுது உனக்குப் பின்னால்!
பிரிவுதான் கொடுமை எல்லை.
பிரிவு தான் வாழ்வின் துன்பம்.
பிரிவுநின் அருமை சொல்லும்
பிரிவில் தான் அறிவேன் ஞானம்!

உடலுடன் உயிரும் போலே
ஒளியொடு வெப்பம் போலே
கடலொடு அலையும் போலே
காற்றொடு இசையும் போலே
கிடக்கத்தான் வேண்டும்… ரெண்டு
உடலங்கள் உயிரும் ஒன்றாம்!
இடைவெளி மிகுந்தால் சாவின்
வலிமை நாம் உணரு வோமாம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply