கனவின் வரம்

கனவு கண்டு சிறிது களித்துளேன்.
கனியுமென்று களைத்ததுமே ஏங்கியோன்
நனவில்… இன்பம் கிடைக்கா யதார்த்தத்தில்
நனவு வெறுமையை மட்டுமே நல்கையில்
நனவில் ஏமாற்றம் மாத்திரம் மிஞ்சையில்
நனவில் நட்டங்களே நிதம் எஞ்சையில்
கனவிலே சிறு இன்பத்தைக் காண்பதில்
கனவுகண்டு உயிர்தக்க வைக்கிறேன்!

நனவில் என்எண்ணம் எதுவும் பலிக்கலை!
நனவில் என்வாக்கு ஏதும்மெய் யாகலை!
நனவில் உடல்உயிர் சுகமெதும் காணலை!
நனவில் செல்வங்கள், சொத்து கைசேரலை!
நனவில் அன்புறவுண்மையாய் வாய்க்கலை!
நனவில் பேர்புகழ் பெற்று நான் வெல்லலை!
கனவில் இவற்றிற் சில வந்தென்.. ஆசையைக்
கலைத்தி டாததால்… நனவில் நான் சாகலை!

காணும் கனவு நனவென மாறிடும்!
காணும் கனவு ஒரு நாள் பலித்திடும்!
காணும் கனவு கண்முன் நிஜமாகும்!
காணும் கனவு கையில் வரமாகும்!
ஆதலால் இன்றும் கனவில் சினைத்திடும்
அற்ப இன்பங்கள் அளப்பெரும் இன்பமாய்
நாளை நனவில் நிஜமாகும் நிச்சயம்
நம்பி இன்றும் கனவினால் வாழ்கிறோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply