இயல்பாகு

இயல்பு என்பது இயற்கையாய் வாழ்வது!
இயல்பு என்பதே இயற்கை அழகது!
இயல்பு உனக்குள் இருக்கும் இயற்கையின்
இனிமை… இயல்பே வாழ்வின் அர்த்தம் அது!
இயல்பு என்பது எந்தத்தலையீடும்
இன்றி… இயங்கும் உயிரின் சுதந்திரம்.
இயல்பு என்பது வேசமற்றா ழுதல்
இயல்பு அலங்காரம் அற்ற நிஜ எழில்!

குழந்தையாக நீ இயல்பாய்ச் சிரிக்கிறாய்.
குழந்தையில் நீ இயல்பாய் நடக்கிறாய்.
இளமை முற்ற நீ இயல்பைத் தினந்தினம்
இழந்து… நின்நற் குணத்திலும் மாறினாய்!
எழில்இயல்பு உன் அடையாளம்… அதிற்கூட
இழிந்து பொய்போலி வேசமும் பூணுறாய்!
பழகும் வாழ்வில் நீ இயல்பை மறைக்கிறாய்!
பாருக்காக உன் இயல்பை மறுக்கிறாய்!

சுயம்பு நின் சுயம் தொலையும் படி தானே
சூழ்நிலைக் கைதியாகித் திரிகிறாய்!
இயல்பு ஆற்றல் எளிதாய் நிரூபிக்கும்
உனை….. பிறரின் இயல்பை படி செய்து
செயற்கையாய்ச் சீவன் அற்றுநீ தோற்கிறாய்!
சீவனுள்ள நின் இயல்பான ஆற்றலால்
உயர்தல் நிச்சயம்.. உலகுனைத் தந்ததுன்
இயல்பை வாங்க இயல்பாகு வெல்லுவாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply