மூலமும் நீயாகு

தேவதை இங்கு எழு – என்நெஞ்சில்
தித்திப்பை ஊட்டிவிடு!
காவிய மாகித் தொடு – கண்காணித்தென்
கண்ணைத்திறந்து சுடு!
பாவியென இருந்தேன் – என்பாவங்கள்
பஞ்செனத் தீய்த்து எடு!
தாவி அணைத்து அழு – என்தணற்
தாகம் தணிக்க விடு!

யாருமற்றே இருந்தேன் – ஓர் ஆணவ
யானையை உள்சுமந்தேன்.
வேர்களற்றுள்ளதெனத் – தெரிந்தும்
விண்ணனென அலைந்தேன்!
ஊர்முன் நிமிர்ந்திருந்தேன் – என்றாலும் யான்
உன்முன் பணிந்திருந்தேன்!
சீர்தரும் தேவதையே – என்னைத்தொட்டு
செதுக்கு நீ தினமே!

சக்தியென்றே இணைந்து – இந்த வெறுஞ்
சடத்தை தூண்டாயோ?
புத்தியுளே புகுந்து – கணமுந்தான்
புதுமைகள் நல்காயோ?
யுக்தி எதையுஞ் செய்து – பலபல
யுகம்நான் வாழ விடு!
முத்திக்கும் நீ உதவு – முதலொடு
மூலமும் நீயாகு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply