காக்கின்ற சக்தி

எண்ணில் அடங்கா எழிலைப்படைத்தபடி
விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் – கொண்டு
விளங்கும் பெருஞ்சக்தி வேதமகா தேவி
விழி அசைவே எங்கள் விதி!

எதையும் இயக்கும் இயக்கமவள் மூச்சு!
விதைக்கும் விழுதுக்கும் வேர்க்கும் – முதலவளே!
அன்னை மகாசக்தி அன்பே உருவானாள்
துன்பமெனில் கொல்வாள் துயர்!

என்ன கிடைத்தும் எதற்கோ அழுதேங்கி
உன்வாழ்வின் நிம்மதியை ஓர்நொடியும் – கொன்றொழித்து
தோற்பவனே… வாழ்வோர் முறைதான் கிடைத்ததனை
காத்துவெல்லு… காக்கும் இறை!

வாழ்க்கையொரு நாடகமாம்..உன்வேசம் ஒன்றேதான்!
வேறுவேறு பாத்திரம்நீ ஏற்று – வாழ
முடியாதுன் பாத்திரத்தைச் சீராய் நடி… உன்
அடையாளம் தன்னை அறி!

நீ ஏற்ற பாத்திரத்தை நீ விரும்பி ஏற்றாயா?
யார்தந்தார்… கேட்டு மறுப்பாயா? – ஏற்றதனை
நன்றாய் நடி அடுத்த நாடகம் வாய்க்குமட்டும்
உன் இயல்பை மீட்டு உயர்!

தெய்வம் என ஒன்று உண்டு… திசைதிக்கை
உய்விக்கும் சக்திக் குயிருண்டு – பொய் நிலைத்து
வாழாது மெய்யே இறை…நம்பி நீசெல்லு
வீழாது உந்தன் விதி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply